கட்டுரைகள்

உழைப்பே உயர்வுக்கு வழி…! – சிறுகதை

யாழ்ப்பாணத்தில் நாதன் என்னும் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு எழுபது வயது. முதுமையினால் உடல் தளர்ந்து போனான். கடுமையான வருத்தமும் பிடித்துக் கொண்டது. எழுந்து நடக்கவே முடியவில்லை. படுக்கையில் விழுந்து விட்டான். இனிமேல் தான் உயிர் பிழைப்பது அரிது என்று எண்ணினான்.

தனது நான்கு புதல்வர்களைப் பற்றியும் நினைத்தான். அவர்கள் உழைக்காமல் சோம்பேறிகளாக ஊர் சுற்றித்திரிவதை நினைத்துக் கவலைப்பட்டான்.

உழைப்பின் அருமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென விரும்பினான். தனது நெல் வயல்களைப் பயன்படுத்தி வருடந்தோறும் நெல் விளைவித்தால் அவர்கள் சந்தோஷமாக வாழ முடியும், இதனை அவர்கள் எங்கே உணரப் போகிறார்கள் என்று கவலைப்பட்டான்.

சோம்பேறிப் புதல்வர்களை வயலில் இறக்கி உழுது பயிர் செய்ய வைக்க வேண்டும் என்று பல நாட்களாகச் சிந்தித்தான்.

ஒரு நாள் அவன் தன் புதல்வர்கள் நால்வரையும் தன் படுக்கையருகே வரவழைத்தான். அவர்களைப் பார்த்து,

“என் அருமைக் குழந்தைகளே! நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுத் தேடிய செல்வம் முழுவதையும் ஒரு பெட்டியில் வைத்து நமது வயலில் ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளேன். நான் இறந்தபின் நீங்கள் அந்தப் புதையலைத் தேடி எடுத்துச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.

இதனைக் கேட்டதும் புதல்வர்கள் நால்வரும் மகிழ்ச்சி யடைந்தனர். ஒருவன் தகப்பனைப் பார்த்து “அப்பா! நீங்கள் அந்தப் புதையலை வயலில் எந்த இடத்தில் புதைத்து வைத்துள்ளீர்கள்” என்று கேட்டான்.

அதற்குக் கிழவன் “மகனே அதைத்தான் நான் மறந்துவிட்டேன். நமது வயலுக்குள் எங்கோ ஓர் இடத்திற்றான் இருக்கிறது. நீங்கள் தேடிப் பாருங்கள் கிடைக்கும்.” என்றான்.

பத்து நாட்கள் சென்றபின் கிழவன் இறந்து போனான். அவனுடைய புதல்வர்கள் நால்வரும் கிழவனுடைய இறுதிக் கிரியைகளைச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

பின்னர் ஒருநாள் புதல்வர்கள் நால்வரும் மண்வெட்டி, பிக்கான் போன்றவற்றுடன் வயலுக்குச் சென்றனர். வயல் முழுவதையும் ஆழமாகக் கொத்திப் புதையலைத் தேடினார்கள். புதையல் அகப்படவில்லை .

“இனி என்ன செய்வது? வயல் முழுவதையும் கொத்திவிட்டோம். இப்படியே விட்டால் சரியில்லை. பண்படுத்தி நெல் விதைப்போம். புதையல் கிடைக்கும் காலத்தில் கிடைக்கட்டும்.” என்று மூத்த மகன் கூறினான். மற்றவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

நிலத்தை நன்கு பண்படுத்தினார்கள். நீர்ப்பாய்ச்சினார்கள். நெல் விதைத்தார்கள். அவர்களது நல்ல காலம் மழையும் காலம் தவறாது பெய்தது. நல்ல நெல் விளைச்சல் ஏற்பட்டது. தங்களுக்கு உணவுக்குத் தேவையான நெல்லை வைத்துக் கொண்டு மீதியை விற்றார்கள்.

பெருந்தொகைப் பணம் கிடைத்தது. அதை நால்வரும் சமமாகப் பிரித்தெடுத்தனர். தந்தை சொன்ன புதையல் இதுதான் என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபட்டு அதிக வருமானத்தைப் பெற்றார்கள். உழைப்பின் பயனே உண்மையான செல்வம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

“உழைப்பே உயர்வுக்கு வழியாகும்”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.